Wednesday, September 5, 2012

உயிராயுதங்கள் - எங்கள் கண்மணிகளின் நினைவுகள் மீது உறுதி எடுத்துக்கொள்வோம் ,விடுதலையை இன்னும் வீச்சாக்குவோமென்று.


மகனைப்பார்த்து எவ்வளவு காலம் இருக்கும் இப்ப எப்படி இருப்பானோ? அம்மாவுக்கு ஏக்கம்.மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்தொடங்கிய போது "புலிக்கு..." என்று புறப்பட்டு போனவந்தான்.அதன் பிறகு அவர்கள் ஒருநாள்கூடக் காணவில்லை.

இடையில் ஒரு நாள்.....

சண்டை ஒன்றில் மைன்ஸ் வெடித்து பிள்ளைக்கு கால் போய்விட்டதாம் என்ற துயரச்செய்தி அம்மாவின் காதுக்கு எட்டியது.

அம்மாவின் கண்களில் அருவி. வேதனையால் துடித்துக்கொண்டிருப்பானோ? .. அம்மா என்று அழுவானோ?..

அவள் மகனையே நினைத்துக்கொண்டு இருப்பாள். கொஞ்சநாட்களாக அம்மாவின் இரவுகள் தூக்கமற்று நீண்டு கழிந்தன.

காலம் அசைந்தது....

பிள்ளை இப்ப யாழ்ப்பாணத்திலையாம்.... கடற்புலியாக கிளாலியில நிக்கிறாணாம்...

சிங்கள நேவியிட்ட இருந்து சனங்களை காப்பாத்துகிற வேலையாம்....

அவர்கள் அறிந்தார்கள்.

எவ்வளவு காலமாகி விட்டது...? எப்படி இருக்கிறானோ ? மகனைப்பார்க்க அம்மா ஆசைப்பட்டாள். பாசமும் ஆவலும் அவளை அவசரப்படுத்தியது.

சோதனைச் சாவடிகள்.இராணுவக் கெடுபிடிகள். கொச்சைத்தமிழில் துளைத்தெடுக்கும் கேள்விகள்.கிரானில் துவங்கி தாண்டிகுளத்தில் முடிந்த துயரப்பயணத்தின் இறுதியில் அம்மா யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தாள்.

மட்டக்களப்பு தொடர்பகத்தில் பெயரை பதிந்து, பிள்ளைக்கு தகவல் அனுப்பிவிட்டு ஆவலோடு காத்திருந்தாள். தங்கியிருந்த வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருக்க ஒரு நாள் கடந்து போனது. ஆனால் மகன் வரவில்லை.

கிளாலியில நெவிக்கு கரும்புலி தாக்குதல் நடந்ததாம்... கனக்க நெவியும் முடிஞ்சுதாம்... என்று ஒரு செய்தி மட்டும் வந்தது.

எல்லோருக்கும் சோகம் கலந்த மகிழ்ச்சி. அம்மாவுக்கும் தான்.

மாலையானதும் பரபரப்பாக பேசப்பட்ட அந்தச் செய்தியை தாங்கி "ஈழநாதம்" விசேட பதிப்பு அம்மாவின் கைகளிற்க்கு வந்தபோது......

அந்தப்படங்கள் .......அந்தப்படம்.....!அம்மா உற்று உற்றுப் பார்த்தாள். கண்கள் இருண்டன.உடல் விறைத்துப் போனது. நம்பவே முடியவில்லை. அம்மாவின் பிள்ளை வரதன்.......?

அவன் தானா என்று பெயரை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஆம் அது அம்மாவின் பிள்ளையே தான். அள்ளி அணைத்து முத்தமிட ஆசையோடு ஓடோடி வந்தாளே..... அதே பிள்ளைதான்.

கறியில்லாமல் , காசுமில்லாமல் அடுப்பெரியாத நாட்களில், "சோறுகாச்சணை கறியோட வாறன் " என்று துவக்கெடுத்துக்கொண்டு காட்டுக்கு போவானே... அதே மகன்!

வீதியில சிங்களப்படை மறித்து, கிறனைட்டை கையில் கொடுத்து "வாயுக்குள்ள போடடா..." என்ற போது , "விருப்பமென்றால் உன்ர வாயுக்குள்ள போடு..." என்று துணிவோடு திருப்பிக்கொடுத்துவிட்டு வந்தானே... அந்த மகன்.

சோகத்தோடு அணைத்து நிற்க்கும் தலைவனுக்கு அருகில் பூரிப்போடு சிரித்துனின்றான். அந்த கரும்புலி.

தாங்க முடியாத பெரும் சுமையாய் துயரம் நெஞ்சை அழுத்த அம்மா அழுதாள்.கவலையை தீர்க்க கண்ணீர் தீரும் வரை அழுதாள்.கந்தசாமி அய்யாவிற்கும் அம்மாவிற்கும் பிறந்த ஒன்பது குழந்தைகளுக்குள் நான்காவது வரதன். இராமச்சந்திரன் என்பது இயற்பெயர்.

1973 ம் ஆண்டிற்கு பிறகு ,ஒவ்வொரு வருடமும் , தமிழ் புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாக வரதனின் பிறந்தநாள் வந்து போகும்.

கல்வியிலும் , விளையாட்டுத்துறையிலும் ஆர்வம் மிகுந்தவனாக பள்ளிக்கு போனவனை, அப்பாவோடு வயலுக்கு போகவைத்தது குடும்பநிலை.

குடும்பத்துச் சுமை பகிர்ந்து உழைத்து , 16 வயதுவரை வீட்டோடு இருந்தவனை இயக்கத்துக்கு போக வைத்தது நாட்டு நிலை.

மன்னம்பிட்டிக்கு கிழக்கே 15 மைல் தூரத்திலுள்ள கள்ளிச்சை வடமுனைதான் ஊர். ஆக்கிரமிப்பின் கொடிய வலியை அனுபவிக்கும் தாயகத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்று.

மட்டக்களப்பில் பயிற்சியை முடித்தவனுக்கு அங்கு கண்ணிவெடிப்பிரிவில் பணி.

சிங்களப்படையுடன் மீண்டும் போர் தொடங்கி- வெடி ஓசைகளால் நிறைந்து , நகர்ந்து கொண்டிருந்த நாட்களில் ஒன்று, கள்ளிச்சை - வடமுனைக்கும் பெண்டுகல் சேனைக்கும் இடையில் எதிரி விதைத்து விட்டு போயிருந்த மிதிவெடிகளில் ஒன்று விநியோக வேலைகளில் ஈடுபட்டிருந்த வரதனின் வலதுகாலைப் பிய்த்தது.

காட்டு முட்கள் கீறிக்கிளிக்க நரகவேதனையிற்கு நடுவில் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டான் வரதன்.சிகிச்சை முடிய புகைப்படப்பிரிவில் பணி.

கிளாலியில் இருந்த கடற்புலிகலின் தளம்.

எங்கள் அன்புக்கினிய மக்களை ,இரத்தப்பசி கொண்டலையும், இனவாத பேய்களிடம் இருந்து காத்து நிற்க்கும் உன்னத பணியில் அவர்கள். இரவில் விழித்திருந்து அலைமடியில் காவல்.பகலை இரவாக்கி தூங்கமுயலும் வாழ்வு.

முகாமில் எப்பொழுதும் கலகலபை நிறைத்திருப்பவன் மதன் தான்.துடி துடிப்பான சுபாவம் அவனுடையது.வரதனும் மதனும் உற்ற நண்பர்கள்.புகைப்படப்பிரிவில் ஒன்றாக வேலை செய்தபோது மெல்ல அரும்பிய உறவுதான் - இன்று உயிருக்கு உயிரான சிநேகிதமாக இறுக்கம் பெற்றிருந்தது.ஒன்றாக தலைவருக்கு கடிதம் எழுதி, ஒன்றாக கடற்புலிகளுக்கு வந்து ,ஒன்றரை கால்கலோடு நீந்தப் பழகி, பயிற்சி பெற்று, படகேறி , கடலில் களமாடி ,ஒன்றாக கிளாலியிலும் பணி செய்தவர்கள், ஒன்றாக கரும்புலிக்கும் பெயர் கொடுத்தவர்கள். இறுதியிலும் ஒன்றாகவே போனார்கள்.

மதன் துடி துடிப்பானவன். ஒற்றைக்காலில் கூத்தாடி... ஊன்று தடியோடு துள்ளியோடி... கும்மாளம் அடித்தபடி திரிந்து.. அவன் ஓய்ந்ததே இல்லை.

திருமலை காட்டில் மிதிவெடி ஒன்று கழட்டிவிட்ட இடதுகாலுக்கு பதிலாக ஜெய்ப்பூர் கால் கொளுவப்பட்டிருந்தது.பொய் காலை கழட்டிவிட்டு ஒன்றரை காலில் மரத்தில்லேறி மாங்காயும் ,இளநீரும் பிடுங்கித்தந்து, எங்களோடு சேர்ந்திருந்து சாப்பிட்டு மகிழ்ந்த உன்னத நண்பன் அவன்.

இரவெல்லாம் படகோடி, கடலில் சமராடிவிட்டு, பகலில் தூங்க முயலும் தோழர்களை ஊன்றுதடியால் தட்டிக் குழப்பித்தொந்தரவு செய்துவிட்டு.துள்ளி ஓடி அவர்களின் அன்பான சினப்பிற்க்கும் அளாகின்றவன் அந்த குழப்படிகாரன்.அவன் கூட தானும் இரவு சண்டைக்கு போயிருப்பான் அனாலும் பகலிலும் ஓடித்திரிவான்.

சண்டைக்கு தயாரான ஓடுபாடுகள் இல்லாத ஓய்வான ஒரு மாலைப்பொழுதில் - மதன் ஒரு தென்னை மர அடியில் சாய்ந்திருப்பான்.கடற்காறோடு கலந்து ஒரு பாடல் விரியும்.தன்னுடையது பாடுவதற்கேற்ற ஒரு குரல் இல்லையென்பது தெரிந்திருந்தும் அவன் பாடுவான். அதில் ஒரு கவர்ச்சி இருக்கும்...அருகில் இருப்பவர்களை ஈர்க்கும்.

எப்போதும் எதிலும் கவனமில்லாத ஒருவனைப்போல் பகிடி சோல்லித்திரிகின்ற மதன், தனது திறமையை வேலைகளின் போது செயலில் காட்டுவான்.எங்களால் செய்யமுடியாமல் போகிற சில சில வேலைகளை, ஒரு காலை இழந்தவனாய் இருந்தும் அவன் செய்துமுடிப்பான்.பெரும்பாலும் தவறுகள் செய்யாமலே இருக்கிற மதன் , சக தோழர்கள் தவறு செய்யும் போது சொல்லித் திருத்துகின்ற போராளி.

மதனுகிருந்த இயழ்பான குழப்படித்தனத்தால், வரதனோடு தோடங்கிய ஒரு பகிடிச்சண்டை சீரியஸாக முடிந்தது.அந்த உயிர் நண்பர்கள் கதைக்காமல் பிரிந்து போய்விட்டார்கள்.

அடுத்த 24 மணி நேரம் வெறுப்பூட்டுவதாக கழிந்தது.

வரதன் குளிக்கப்போனான்.எப்போதும் இருவரும் சேர்ந்தே போவார்கள்.இப்போது வரதன் தனியே.முகத்தைதொங்கப் போட்டுக்கொண்டு மதன் ஒரு மரக்குத்தியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தான்."போ" என்று நட்புத் தூண்டவும் தன்மானம் தடுத்தது.அனாலும் அன்பே வென்றது. ஊன்றுதடியுடன் துள்ளிக்கொண்டு முந்தி ஓடிப்போய் வாளியை எடுத்து வரதனுக்கு குளிக்கவார்க்கத்தொடங்கினான்.சேரனிடம் இதைசொல்லும் போது வரதனின் கண்கள் பனித்திருந்தன.

வரதன் அமைதியானவன்.அதிகம் பேசத் தெரியாதவன்.கதைகளை விட செயல்களிலேயே அதிக ஈடுப்பாடும் நம்பிக்கையும் கொண்டவன்."கதைக்கும் போதெல்லாம் இயக்கத்திற்க்கு எதாவது பயன்படக்கூடியதாய் கதையுங்கோடா.." என்று எங்களுக்கு புத்தி சொல்பவன்.அது வெளியில் தெரியாமல் தனக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை.

அம்மா அப்பாவை பிரிந்து, உறவுகளை பிரிந்து நீண்ட காலம் எங்கு இருக்கின்றார்களோ...? ஆமிப்பிரச்சனைகளால் ஓடுப்பட்டுத் திரிகின்றார்களோ...? வீட்டுக்கு ஒரு கடிதம் எழுதிப் பார்ப்பம் என்ற ஆவல் வரதனுக்கு எழுந்தது.

வரதன் கடிதம் எழுதினான்.பதிலுக்காகக் காத்திருந்தான். அடுத்த தரம் எழுதினான்; காத்திருந்தான். பதிலில்லை ,மூன்றாம்தரம் - பதிலில்லை.நான்காவது கடிதமும் போனது; பதில் வரவே இல்லை.

இடம்பெயர்ந்து வந்து கிளாலியில் இறங்கிய உறவினர்கள் சிலரை எதிர்பாராமல் வரதன் சந்திக்க நேர்ந்தது. "ஒரு இரவு ஊருக்குள்ள ஆமி புகுந்து வெட்டியும், சுட்டும் நூற்றுக் கணக்கில் சனங்களை கொண்டவங்கள் தம்பி.

...தப்பி ஓடிவந்த எங்களுக்குள்ள உன்ரை வீட்டுக்காரர் வரேல்லை.... என்ன நடந்ததோ....? கடவுளுக்குத்தான் தெரியும் !" வானத்தைப் பார்த்து கைகளை விரித்துச் சொல்லிவிட்டு, ஒரு பெருமூச்சோடு அவர்கள் போய்விட்டார்கள்.

காதுகளில் இடியென இறங்கிய செய்தியால் அவன் துடித்துப்போனான். ஏற்கெனவே அவனுக்குள் வீசிக்கொண்டெழுந்தது. ஆனாலும் அது ஒரு வதந்தி மட்டுமே என்பது கடைசிவரை அவனுக்குத் தெரியாமலே போய்விட்டது.

கிளாலியின் விரிந்த கடல்.

தமிழர்களின் இரத்தமே அலைகளாய் அசையும் 20 மைல் நீளச் செந்நீர்ப்பரப்பு.

இரத்தப்பசிகொண்டு அலையும் சிங்களப் படை. உயிர் விழுங்கும் துப்பாக்கி வாய்களோடு காத்து நிற்க்கும் மரணவலயம். அந்த மரண வலயத்திலும் - கடலரண்களாய் கடற்புலிகள் காவல் நிற்க, எங்கள் மக்கள் துணிவுடன் பயணிக்கும் குடாநாட்டுக்கான தனியொரு பாதை.

நாகதேவன் துறையில் பொருத்தப்பட்டிருக்கும் சக்தி வாய்ந்த ராடர்களின் திரையில் புள்ளிகளாய் அசையும் எங்கள் படகுகளை, துல்லியமாக இனம் கண்டு தாக்கி மூழ்கடிக்க விரைந்துவரும் எதிரிப் படகுகளை, உள்ளங்கையைக் கூட பார்க்க முடியாத கும்மிருட்டிலும் கூட, கண்களை மட்டுமே நம்பி எதிர்கொண்டு விரட்டியடிக்கும் சாதனைக் களம்.

எதிரி தடை செய்த வலயத்தை எதிரிக்குத் தடை செய்து வீர சாதனை படைக்கும் கடற்புலிகளின் போர்திறனையும், அதனை பிரமாண்டமான ஒரு வளர்ச்சி நிலையை நோக்கி உயர்த்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் முயற்சியையும், ஆற்றலையும் உலக அரங்கில் பறைசாற்றிக்கொண்டிருந்த போர்முனை.

கிளாலிக் கடலில் மக்கள் போக்குவரத்துச் செய்ய்த்துவங்கிய நாளிலிருந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் கடற்புலிகளின் அணி, வரதனையும் மதனையும் கொண்டிருந்து.

அந்த கடற்களத்தில் புலிகள் எதிரியைச் சந்தித்த ஒவ்வொரு சண்டையிலும், இவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் கனன்றிருக்கின்றன.

விடிகாலைகளில் , பயணம்போன எம்மக்கள் செத்தபிணங்களாய்க் கரையொதுங்கிய போதெல்லாம், அவர்களுக்குள் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டெரியும்.

அவர்கள்,துணிகரமான சண்டைக்காரர்கள். அவர்களுடைய வண்டிகளில், எதிரியின் படகுகளை மூக்குக்கு நேரே எதிர்கொண்டு அவனை திகைப்பிலாழ்த்துவார்கள். கண்ணைக்கட்டி இருளில் விட்டது போன்ற இருட்டிலும் எதிரியின் படகுகளை இனம் கண்டு நல்ல வியூகங்களில் தளம்பலின்றி வண்டியைச் செலுத்தி- அவனைத் தாக்கி திணறடிப்பார்கள். அந்த மயிர்க்கூச்செறியும் கணங்களில் எதிரி தலை தெறிக்க ஓட்டமெடுப்பான். அந்த நேரங்களில் அவர்கள் சொல்வார்கள்: "இப்ப மட்டும் ஒரு சக்கை வண்டி இருக்குமெண்டால், இவங்களின்ரை கதை இதிலையே முடியும்"

அவர்கள் ஒரு கரும்புலித் தாக்குதலுக்காக காத்திருந்தார்கள்."எங்களின் மக்களைக் கொன்றொழித்தவர்களை இதே கடலில் வைத்துக் கொன்றொழிக்க வெண்டும்.என்ற வீர சபதம்.அவர்களின் இதயங்களில் முழங்கிகொண்டிருந்தது. கரும்புலித் தாக்குதலை நடாத்தும் இரவ, அவர்கள் எதிர்பார்த்திருந்தர்கள்.

"ஏன் கரும்புலியாகப் போகின்றீர்கள்?" என்பதற்கு , ஒரு தத்துவார்த்த விளக்கத்தை அளிக்கக்கூடிய அறிவை அவர்கள் பெற்றிருக்கவில்லையாயினும், அதன் தேவையை - அதன் முக்கியத்துவத்தை - அதன் பலத்தை - உளப்பூர்வமாகவும் தெளிவாகவும் உணர்ந்துகொண்டவர்களாக அவர்கள் இருந்தார்கள்.

வரதன் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருப்பான். அருகில் போகிற நண்பனிடம் "தலைவர் சொன்னதையே நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன்.எனது சிந்தனையெல்லாம் அதிலையே இருக்கு.அந்த ஒரு நொடிப்பொழுதுக்காக நான் எவ்வளவு காலமும் காத்துக் கொண்டிருப்பன். என்றொ ஒரு நாள் கிளாலிக் கடலில் ஒரு 'வோட்டர் ஜெட் ' நொருங்கும் " என்பான்.மதன் மட்டக்களப்பைச் சேர்ந்தவன். சீனிவாசன் சிவகுமார் என்பது அவனுடைய இயற்பெயர்.1975 ஆம் ஆண்டு , செப்ரெம்பர் திங்கள் 7ம் நாள், அந்த வீர மைந்தனைப் பெற்றாள் ஒரு வீரத்தாய்.

குடும்பத்தில் மூன்று அண்ணன்களுக்கும், ஒரு தங்கைக்கும் இடையில் அவன், மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் போது 1989 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு நாள், பள்ளிக்கூடத்திற்கென்று புறப்பட்டுப்போனவன் திரும்பிவரவில்லை."இயக்கத்துக்குதான் போயிருப்பான்..."

என்ற வீட்டிலுள்ளவர்களின் ஊகிப்பும் பிழைத்துவிடவில்லை.

கிளாலியின் கடற்போர் முனை. எறக்குறைய 60 நாட்கள் அலைகள் போல அசைந்து கடந்துவிட்டன.

அந்த உயரிய சாதனையை நிகழ்த்த அவர்கள் கடலுக்கு போய்ப்போய்த் திரும்பி வரவேண்டியிருந்தது. நாட்செல்ல செல்ல அவர்களுடைய உறுதி இறுகிக்கொண்டே போனதேயன்றி, இளகியதில்லை.

ஒவ்வொரு தடவையும் சண்டை துவங்கும். துப்பாக்கிக் குழாய்கள் சிவக்க எங்களது படகுகள் பகைவனை எதிர்கொள்ளும். 'சக்கை' வண்டி அவனை மின்னலென நெருங்கும்.எதிரி ஓட்டம்மெடுப்பான்.சக்கை வண்டி கலைக்க இடைவெளி குறுகும்.எதிரியின் வேகம் கூடும்.அதிகரித்த வேகத்தோடு சக்கை வண்டி அண்மிக்க, ஒரு அடி உயர நீரில் ஓடக்கூடிய தன் நவீன படகை எதிரி ஆழம் குறைந்த நீர்ப்பரப்பின்னூடு செலுத்துவான்.சக்கை படகுகள் தரை தட்டும். தொடர்ந்து கலைக்க முடியாமல் திரும்ப வேண்டியிருக்கும். மறுநாள்......

முகாமின் ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு இருப்பார்கள்.இரவு தங்களால் இடிக்க முடியாமல் போய்விட்டதே என்பதற்காக, அவர்கள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.

61 நாட்களும் இப்படித்தான் நகர்ந்தது.

25.08.19993

வழமையான இரவு.

நிலவு உலா வராத இருண்ட வானம்... சிலிர்ப்பூட்டும் குளிர்....

உடலுக்கு அசதியைத் தந்தாலும், உள்ளத்திற்க்கு உற்சாக்மூட்டும் உவர்காற்று... கடற்புலிகள் காவல் உலா வர மக்களின் பயணம் துவங்கியது.சக்கை நிரப்பிய "புலேந்திரன்" "குமரப்பா" வில் மதனும் வரனும் தயாராக நின்றார்கள்.

கடந்துபோனவைகளைப் போல அல்லாமல் இந்த இரவில், அவர்களின் முகங்களில் நம்பிக்கையின் தெறிப்பு, இனம்புரியாத பூரிப்பு.அருகில் நின்ற கண்ணாளனிடம் குப்பியைக் கழற்றிக்கொடுத்து விட்டு மதன் சொன்னான் "இண்டைக்கு இடிச்சே தீருவன்.திரும்பி வரமாட்டன்."

நேரம் நடு இரவைத் தாண்டியிருந்தது.நாகதேவன் துறைத்தளத்திலிருந்து அலைகளைக் கிழித்துக்கொண்டு முன்னேறினான். எதிரி. இன்று அவனுடைய தாக்குதல் வடிவம் வித்தியாசமானதாக இருந்தது.

ஒவ்வொரு தடவையும் மாறுபட்டதாக இருக்கின்ற போதிலும் இன்று அவன் அமைத்து வந்த வியூகம் புதுவிதமானது. இரண்டு அணிகள். ஒன்று ஒரு புறத்தில் புலிகளைத் தடுக்க , மற்றையது மறு புறத்தில் மக்களைத் தாக்கும்.

ஆனால், பகைவன் சற்றும் எதிர் பாராதவிதமாக அவனை இருமுனைகளில் எதிர்கொண்டனர் கடற்புலிகள். துப்பாக்கி முனைகள் தீ உமிழ, வானம் விழாக்கோலமானது.

சண்டை உக்கிரமடைந்ததுகொண்டிருந்த ஒரு கட்டத்தில், காத்திருந்த 'புலேந்திரன்' படகை 'வோக்கி' அழைத்தது. மதன் ஆவலோடு பதில் கொடுத்து , கட்டளைக்கு காதுகொடுத்தான்.

மக்களைத் தாக்கவந்த எதிரி, புலிகளிடம் சிக்கிப்போயுள்ள முதலாவது சண்டை முனையில் ஏற்ககெனவே விளங்கப்படுத்தப்பட்டிருந்த தாக்குதல் திட்டத்தின்படி - 'வோட்டர் ஜெற்' படகொன்றைத் தாக்குமாறு வோக்கி கூறியது.

சுற்றியிருந்த தோழர்கள் கண் கலங்க, சிரித்த முகத்தோடு மதன் புறப்பட்டான். மின்னல் கீற்றென நெருங்கிய கரும்புலிப் படகைக் கண்டு எதிரி தப்பி ஓட முயல, அதற்கு அவகாசமில்லாமல் , மதன் அதன் மையப்பகுதியோடு மோதினான். பிரகாசித்தெழுந்த ஒளி வெள்ளம் மறைந்து , இருளோடு இருளாகக் கரும்புகை கரைந்தது கொண்டிருக்கும்போது, இரண்டாகப் பிளந்து மூழ்கிக்கொண்டிருந்த 'P115' இலக்க 'வோட்டர் ஜெற்' றிலிருந்து புலிகள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தான் நேசித்த கடலோடும்..... காற்றோடும்..... எங்கள் மதனும்..... அவனது 'புலேந்திரனும்'.

அந்த கடற்களம் நீண்டுகொண்டிருந்தது. கடற்புலிகள் கடலில் சந்தித்த முதலாவது பெருஞ் சமர் அதுவாகத்தான் இருக்கமுடியும்.புலிகளைத் தாக்க வந்த அணியை புலிகள் தாக்கிக்கொண்டிருந்த இரண்டாவது முனையிலிருந்து, 'குமரப்பா' படகிற்க்கு அழைப்பு வந்தது. காத்துக்கொண்டிருந்த வரதன், களத்திற்க்கு விரைந்தான்.

புலிகளின் சண்டைப்படகுகளால் வளைக்கப்பட்ட நிலையில் ,தப்ப வழியின்றி தளத்துக்குத் தகவல் அனுப்பிவிட்டு உதவி வரும் வரை சண்டையிடத் தீர்மானித்து விட்ட ஒரு 'வோட்டர் ஜெற்' படகு , வரதனின் இலக்கு. 'வோக்கி' அவனுக்கு தாக்குதல் வழிமுறையை வழங்கியது.உதவி கிடைக்குமுன் அதனை உடைக்க வேண்டும்.இருள் ஆளை ஆள் பார்க்க முடியாத இருள், வளைத்து நிற்க்கும் புலிகளின் படகுகளை அவதானித்து - விலத்தி ஓடி , 'வோட்டர் ஜெற்' றை சரியாக இனம் கண்டு - அது அவனுடையதுதான் என்பதை உறுதிப்படுத்தி இடிக்க வேண்டும். தவறுதலாக எங்களுக்குள் முட்டுப்பட்டாலோ விளைவு விபரீதமானதாக மாறிவிடும்.

சரியான இலக்கை நோக்கி, வரதன் நெருங்கினாந் அதிகரித்த வேகத்தோடு. திகைத்த எதிரி எதுவுமே செய்யமுடியாமல் மலைத்துப்போய் நிற்க , அடுத்த கணப்பொழுதில்...! அந்தக் கண்ணிமைக்கும் நேரத்திற்குள்...!

எதிரியின் படகு.... எங்கள் அன்பு வரதனும் 'குமரப்பா' வும் தான்......

நாகதேவன் துறையிலிருந்த கடற்படைத் தளத்தில் தகவல் தொடர்பு சாதனம், 'P121' என்ற தங்கள் போர்படகை அழைத்துக்கொண்டிருக்க, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப்படகிலிருந்து, கடற்புலி வீரர்கள் ஆயுதங்களை எடுத்துமுடித்துவிட்டார்கள்.

ஒரே பாயில் படுத்து, ஒரே கோப்பையில் சாப்பிட்டு, அளுக்காள் தண்ணி ஊற்றி- ஊத்தை தேய்த்து ஒன்றாகவே குளித்து, ஒரே இலட்சியத்திற்காக வாழ்ந்த அந்த உயிர் நண்பர்கள் - கிளாலிக்கடலில் நடந்த ஒவ்வொரு சண்டையின்போதும், ஒன்றாகவே நின்று, சிங்கள பிணந்தின்னிகளை நெருப்பெனச் சுட்டெரித்தவர்கள் சாகும்போது கூட ஒன்றாகவே போனார்கள்.

எங்களுக்காக...... மக்களுக்காக......

Sunday, January 11, 2009

சோமாலியா என்னதான் நடக்கிறது?

சோமாலியா என்னதான் நடக்கிறது?

வறுமை , பட்டினி ,சாவு எனபதற்க்கு என்றைக்கும் உதாரணமாய் திகழும் அம்மனிதர்கள் செய்யத பாவம் தான் என்ன?

உப்பிபெருத்த வயிறு , ஈர்க்கு குச்சிகள் போன்ற கை கால் இவைதான் அம் மண்ணின் மைந்தரின் அடையாளம்.
ஆபிரிக்க கண்டத்தின் கொம்பு என வர்ணிக்கப்படும் இத்தேசம் கென்யா , எதியொப்பியா ,டிஜிபோரி ஆகிய நாடுகளை அயல் நாடுகளாகவும் இந்து சமுத்திரம் , ஏடன் வளைகுடா ஆகிய வற்றை மறு எல்லைகளாகவும் கொண்டு விளங்குகின்றது.
1960 இல் இதன் ஒருபகுதி இத்தாலி தேசத்திடம் இருந்து பிரிந்து ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் இருந்த மறு பகுதி தேசத்துடன் சேர்ந்து கொண்டது. அதன் பின் 26 ஜூன் 1960 இல் முழுமையான் சுதந்திரம் அடைந்து சோமாலிய சோசலிச குடியரசானது.

எனினும் 1969 இல் நடந்த இராணுவ புரட்சி மூலம் மக்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஜெனரல் ஷெர்மார்க் அதிபரானார். இதன் மூலம் சோமாலியா புரட்சிகர இராணுவம் உருவாக்ககம் பெற்று அவர்களின் சிறந்த திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படை பொருளாதார வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்தக்களவு வெற்றியும் கண்டனர்.

இவ்வேளையில் தான் சோமாலியாவின் தலைவிதி மாறத்தொடங்கியது தனக்கு தானே மண் அள்ளிபோட்டது போல் வல்லரசு போட்டிக்கு தன்னை பலிக்கடா ஆகியது சோமாலியா.

குடியேற்ற காலத்தின் போது சோமாலியாவில் இருந்து பிரிக்கப்பட்டு எதியோப்பாவுடன் இணைக்கப்பட்ட தனது பிரதேசமான ஓக்டெனை மீண்டும் சோமாலியாவோடு இணைக்க வேண்டும் எனும் வேண்டுகோள் சோமாலியாவினால் எதியோபியாவுக்கு விடுக்கப்பட்டது. எதியோப்பா , கென்யா ஆகிய நாடுகளுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிய எதியோப்பியா மீது போர் தொடுத்தது சோமாலியா.

1977 இல் ஆரம்பமான இப்போரை பயன்படுத்தி அன்றைய வல்லரசுகள் (அமெரிக்கா ,சோவியத் யூனியன் -ரஷ்யா ) குளிர்காய சோமாலியாவை தளமாக பயன்படுத்ததொடங்கினர். உலக நாடுகளின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக போரில் குதித்ததாக சோமலியாவை உலக நாடுகள பலவும் பகைத்துக்கொள்ள எதியோப்பியாவுக்கு ஆதரவாக சோவியத் யூனியனும் , சோமாலியாவிற்க்கு ஆதரவாக அமெரிக்காவும் செயற்ப்பட இரு வல்லரசுகளின் பனிப்போர் போட்டிக்கு இரையானது எதியோப்பியாவும் சோமாலியாவும்.தொடர்ச்சியான போர் நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்க, இராணுவ ஆயுதங்கள் மிக எளிதாக கிடைக்க ஆயுதக்குழுக்கள் பலவும் வகை தொகையின்றி உருவாகின. பனிப்போரின் (அமெரிக்கா - சோவியத் யூனியன் இடையான போட்டி ) முடிவு வரை சோமாலியாவில் அரசியல் நிர்வாகம் இயங்காமலே கிடந்தது அல்லது அமெரிக்கா அதனை இயங்காமல் செய்தது என்பதே உண்மை. அமெரிக்கவால் ஒரு பொம்மை அரசு உருவாகினாலும் அதனால் ஆயுதகுழுக்களை கட்டுப்படுத்த முடியவில்லை . ஆயுதகுழுக்கள் உணவுக்காக , நீருக்காக என அடிப்படை தேவைகளுக்குக்காக தம்மிடையே சண்டை போடவேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களும் , ஒவ்வோரு குறிச்சிகளும் என இந்த ஆயுத குழுக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு சிற்றரசர்கள் ஆகினர் ஆயுத குழு தலைவர்கள்.
பசி , பட்டினி என இலட்சகணக்கானவர் மாண்டுபோயினர்.

அனாலும் சோமாலிலாந்து எனும் ஒரு மாகாணம் மட்டும் தன்னை சோமாலியாவில் இருந்து விடுவித்து கொண்டு தன்னை ஒரு சுதந்திர தேசமாக அறிவித்தது. சோமலியா அதனை ஏற்றுக்கொள்ளாத போதும் சோமாலிலாந்து அதிகார பூர்வமன ஒரு அரசகவே உலக நாடுகள் சில நோக்குகின்றன. சில நாடுகள் சோமாலிலாந்தில் தனது அதிகாரபூர்வ தூதுவராலயங்களையும் கொண்டும் உள்ளன. அனாலும் ஐக்கிய நாடுகள் சபையினால் தனி நாட்டிற்கான அங்கீகாரம் இன்றுவரை கிடைக்கவில்லை.

உலகின் கண்களுக்கு இடியப்ப சிக்கலான பிரச்சனைகளை கொண்ட நாடாக மாற்றிய உலக நாடுகள் ஏன் இன்றுவரை சோமாலியாமீது கரிசனை காட்டாது உள்ளன ?

இதன் பின்ண்ணியில் உலக நாடுகளின் நயவஞ்சகம் எப்படி உள்ளது.

இவற்றிக்கு இப்பொழுது நாம் விடை தேடுவோம் ........

ஆம் இதன் அமைவிடத்தை நன்றாகவே பயன்படுத்திய உலக வல்லரசுகள் தமது இரசாயன (யுரேனிய )கழிவுகளை கொட்டும் இடமாக சோமாலியாவை பயன்படுத்தி கொண்டன என்பதே உறைக்கும் உண்மை.

பெரிய கடல் வளத்தை கொண்டிருந்த போதும் அவர்கள் அதன் பலாபலன்களை பெறமுடியாது போய்விட்டனர் சோமாலியர்.


கடற்கரைகளில் தினமும் ஒதுங்கும் இரசாயன கழிவுகளால் கடல் வாழ் உயிரிணங்கள் மட்டுமல்ல சோமாலியா மக்களே வகை தொகையின்றி செத்துக்கொண்டு இருக்கிறனர். உலக நாடுகளுக்கு சோமாலியாவின் கடலில் தமது கழிவுப்பொருட்டகளை கொட்டுவது மிகவும் இலாபகரமாக இருப்பதோடு சோமாலியாவில் ஒரு உறுதியான அரசு இல்லாமை இவர்களுக்கு இன்னும் வாய்ப்பாகிப்போனது.

ஒருபக்கத்தில் ஆயுத கலாச்சாரத்தை ஊக்கிவித்தபடி மறுபக்கத்தில் தமது சுய தேவகளை குறுக்குவழியில் அடையும் இன்நாடுகள் சோமாலியர்களை ஒரு மனித இனமாக மதிப்பதாகவே தெரியவில்லை.ஐக்கிய நாடுகள் சபை வாய்மூடி இருக்க அந்த இனம் வேரோடு சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இன் நிலையில் தான் தங்கள் கடல் எல்லையில் வரும் கப்பல்களை தாக்கத்தொடங்கினர் சோமாலியர்கள் , வழக்கம் போலவே உலகம் அவர்களை கடல் கொள்ளையர் என்கின்ற பட்டத்துடன் அதனை வெறு ஒருதிசையில் அவர்களது பிரச்சனைகளை திசை திருப்பி அவர்களை கொள்ளையாரக்கி , பயங்கரவாதிகள் ஆக்கி அழகு பார்த்தது உலகம்.

போராடித்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்ட அம்மக்கள் , நாகரிக உலகத்தின் சுயநலத்திற்க்கு பலியாகிபோன ஒரு மக்கள் கூட்டம்.அந்த மெல்லிய கறுத்த உருவங்கள் தம் மண்ணிலேயே பசியாலும் நோயாலும் இறந்து கொண்டிருக்க உலகம் இவர்கள் மீது அரசில் நடாத்திக்கொண்டு இருப்பது இன்றைய நவ நாகரிக உலகத்தின் வெட்ககேடான ஒரு செய்தியே...

Sunday, June 15, 2008

உன்னால் முடியும்! எல்லாம் உனக்குள் உண்டு!


உன்னால் முடியும்
எல்லாம் உனக்குள் உண்டு!
வெல்வதுவும்! தோற்பதுவும்!
நம்பித்தடம் புரள்வதுவும்!
வம்பில் தலைசாய்ப்பதுவும்!- எல்லாம்
உனக்குள் உண்டு!

எழுந்து நட - பூமி
உன் காலடியில்
சூரியன் உன்விரல் நுனியில்
சிறு பொறியும் தீயாகும்!
சீறும் காற்றாய் சீக்கிரம் உயர்வோம்!

Tuesday, June 10, 2008

நம்ம ஆள் ஒருத்தனின் அமெரிக்க தேன்நிலவு..

நம்ம ஆளு ஒருத்தன் புதிசா கலியாணம் கட்டி தேன் நிலவுக்கு அமெரிக்கா போக தனது புதுமனைவிக்கும் தனக்கும் அமெரிக்கா விசா, ரிக்கட் , தங்குமிடம் எல்லாம் ஒழுங்கு செய்தான்.

அமெரிக்கா போகிற நாளும் வந்தது.

நேற்று இரவு அம்மா குறுகுறுத்தாள் "தம்பி நாளைக்கு 1ம் திகதி சின்னவனுக்கு பள்ளிகூடத்து காசும் கட்ட வேனும், கரண்டு பில்லும் கட்டவேணும்".

எல்லா பிரச்சனைகளையும் செட்டில் செய்து, ரக்ஸி பிடிச்சு விமான நிலையம் வந்து சேர்ந்தார் நம்ம ஆள். நம்ம ஆளுக்கு சந்திரமண்டலம் போகிற சந்தோசம். வாழ்கையின் இலட்சிய கனவு ஒன்று இன்னும் அரைமணித்துளியில் ஈடேறப்போகிறது.

அமெரிக்க கனவில் இடிவிழுந்தது போல் , ரிக்கட் இன்னும் நீங்கள் "Confirm" பண்னவில்லை பிளைட்டில் இடம் இருந்தால் தருவோம் என்றாள். விமான நிலையத்தில் இருக்கும் உள்வரவுக்கான பகுதிக்கு பொறுப்பாய் இருந்த பெண்மணி.

என்ன இழவோ தெரியவில்லை மனைவியின் ரிக்கட்டில் எதோ குழறுபடியாம்! நம்ம ஆள் குழம்பிவிட்டார். மனைவி இல்லாத அமெரிக்காவா நினைத்துபார்க்கவே தலைசுற்றியது. தேன் நிலவுக் கனவு விமான நிலையத்தோடு பிசு பிசுத்து போனமாதிரி தோன்றியது. நம்ம ஆளுக்கு தலையே சுற்றியது.

விமான நிலையத்தில் அங்கும் இங்கும் பைத்தியமாய் அலைந்தார் , விமான நிலைய அதிகாரிகளை சந்தித்தார். சாதுவாய் தெரிந்த ஒரு அதிகாரியை நம்ம ஆள் திட்டித்தீர்த்தார் அந்த ஆள் கடுப்பாகி தகாத வார்த்தைகளால் திட்டினார். புது மனைவிக்கு முன் அவமானப்படுவது தாங்கமுடியாத ஒன்றாக இருந்தது.

மனதுக்குள் அம்மாவை சபித்துக்கொண்டார். "வெளிக்கிடுகிற நேரத்தில அது இல்லை இது இல்லை என்டு கொண்டு "

நம்ம ஆள் செய்வதறியாது நின்றார். பார்க்க பாவமாய் இருந்தது.

அப்பொழுது தான் அந்த அதிசயம்......

தெய்வம் போல் ஒரு அதிகாரி வந்தார் அவர் சொன்ன வார்த்தைகள் நெஞ்சில் பால் வார்த்தது போல் இருந்தது. ரிக்கட் "Confirm" பண்னி ஆச்சு , நிங்கள் இப்ப அமெரிக்க போறதில ஒரு பிரச்சனையும் இல்லை..

ஆனால் .... இழுத்தார்...

நெஞ்சு பகீர் என்றது.......

என்ன ஆனால்........

அதில ஒரு சின்ன பிரச்சனை இரண்டு பேரும் ஒன்டா போகமுடியாது.

நிங்கள் இப்ப போகலாம் , மனைவி அடுத்த பிளைட்டில் தான் வரலாம். அடுத்த பிளைட் 18 மணித்தியாலங்கள் பிந்தித்தான் வரும்.

அதிகாரி குண்டை போட்டார்....

இதுக்கு நீங்கள் சம்மதம் என்றால் , இந்த ரிக்கட்டிலேயே அமெரிக்கா போகலாம், அப்படி இல்லை என்றால் இன்று போய் வசதியான ஒரு நாளுக்கு உங்கள் பயணத்தை நீங்கள் ஒழுங்கு செய்யலாம்.

அதிகாரி மின்னாமல் இடி இடித்தார்....

திரும்பி போய் அம்மா , தம்பிக்கு முன்னால் நிற்பதை நினைக்க அவமானமாய் உணர்ந்தார் நம்ம ஆள்.


நம்ம ஆள் தலையை சோறிந்தார்.......(சிந்திக்கிறார் என்று நினைக்கிறேன்.......)


தீர்க்கமாய் இப்பொழுது தலையை நிமிர்த்தி அதிகாரியை பார்த்து சொன்னார்......


நான் இப்ப போறன் மனைவி அடுத்த பிளைட்டில் வரட்டும்......


நம்ம ஆள் எடுத்த அதிரடி முடிவில் மனைவி குழம்பிபோனாள்.....

மனைவியை சமாதானப்படுத்தி ,

மனைவியின் பயணத்தில் எந்த பிரச்சனையும் இனி வராது என்பதை ஒன்றுக்கு இரண்டு தடவை உறுதிசெய்து விட்டு , தனது கைக் கணணியையும் (Laptop) அவளிடம் கொடுத்துவிட்டு "நான் போனவுடன் இமெயில் போடுறன் " என்ற வாக்குறுதியுடன்

சோகத்துடன் மனைவியிடம் இருந்து விடைபெற்றார்........

நம்ம ஆள் இப்ப பிளைட்டில் பறக்க , மனைவி விருந்தினர் இருக்கையில் சோகமாய் இருந்தாள்

(போகுதே போகுதே.. என் பைங்கிளி வானிலே...., நானும் சேர்ந்து போக ஒரு சிறகும் இல்லையே.. என்ற பின்னனி பாடல்(Situation song) போட்டால் இந்த இடத்துக்கு நல்லா இருக்கும்)


ஒருவாறாக அமெரிக்க மண்ணில காலடி எடுத்து வைத்தார் நம்ம ஆள்.


ரக்ஸி பிடித்து அவர் பதிவு செய்து வைத்துருந்த தங்ககம் வந்து சேர்ந்தார்.....சொந்த நாட்டைபோல் அல்லாமல் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாததால் நம்ம ஆள் மனதில் அமெரிக்கவிற்க்கு ஒரு தனி மரியாதை எழுந்தது.

மனதுக்குள் தனது நாட்டை திட்டித்தீர்த்தார்........


முதல் வேலையாக தங்ககம் வந்து மனைவிக்கு இமெயில் போட்டார். மனைவி வந்து சேர இன்னும் 18 மணித்தியாலங்களுக்கு மேல் இருந்தது......

வந்த அசதிக்கு குளித்து விட்டு அப்படியே கட்டிலில் சரிந்தவர்தான் , நன்றாக தூங்கிப்போனார்....

ஒரு இரண்டு, மூன்று மணித்தியாலம் கடந்திருக்கும் வாசல் கதவையாரோ பலமாக தட்ட சென்று பார்த்தவருக்கு திகைப்பு வாசலில் நின்றது பொலிஸ்.....


உங்கட றூமை செக் பண்ண வெணும் என்டாங்கள்.........


நம்மட ஊரிலதான் இந்தக்கொடுமை என்றால் இங்கேயுமா?.....

சோதனை போட அனுமதித்தார் நம்ம ஆள்.....


போலிஸ்காரன் முதல் வேலையாய் கணணியை ஏதோ தூளாவினான்.


சிறிது நேரத்தில் தனது கைத்தொலைபேசியில் யாருடனோ கதைத்தான். யாரொ கிரிமினலை பிடித்து விட்டதாக கைத்தொலைபேசியில் சொன்னன்.

நம்ம ஆளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

பொலிஸ்காரன் கேட்டான்....

இந்த கணணியை இரண்டு மணித்தியாலத்திற்க்கு முதல் நீர் உபயோகித்தீரா என்றான்?

நம்ம ஆள் பவ்வியமாக ஆம் என்றார்.

உம்மை சைபர் கிரைமில் கைது செய்கிறேன் என்றான் போலிஸ்காரன்.....

நம் ஆளுக்கு ஒன்டும் விளங்கவில்லை , தனது மனைவிக்கு இமெயில் மட்டுமே அனுப்பியதாக புலம்பிப்பார்த்தார் , அவன் விடுவதாய் இல்லை .

பொலிஸ்காரன் கத்தினான் உனது லூசுதனமான வேலையால் யாரொ ஒரு அமெரிக்க பெண்மணி சாகக்கிடக்கிறாளாம்......

நான் என் மனைவிக்கு இமெயில் அனுப்பினால் உவனுக்கு என்ன ?

என்ன உளறுகிறான்....
நம்ம ஆள் இப்ப தகர்ந்து போனார், தலை சுற்றியது.

கட்டிய மனைவி நடுத்தெருவில் , நான் இப்பொழுது அமெரிக்கா போலிஸில் எல்லாம் மெல்ல கை நழுவுவது போல இருந்தது...

வாழ்க்கை வெறுத்தது....

நம்ம ஆள் ஆத்திரத்தில் உளறினார்.

நம்ம ஆள் உளறது எதுவும் விளங்காமல் , பொலிஸ்காரன் ஒரு மொழி பெயர்ப்பாளன் ஒருவனை கொண்டுவந்தான்....

இதுவேறு மானப்பிரச்சனையாகியது நம் ஆளுக்கு!

நம் ஆள் மொழிபெயர்ப்பாளனுக்கு அளாக்குறையாக பிரச்சனையை விளங்கப்படுத்த மொழிபெயர்ப்பாளன் எதோ பொலிஸ்க்கு சொல்ல 3 மணித்தியால போராட்டத்திற்க்கு பிறகு , பொலிஸ்காரன் மெல்லிய புண்னகையோடு விடுவித்தான்.

இப்ப் நம்ம ஆள் மொழிபெயர்ப்பாளனிடம் கேட்டான் .....

என்ன பிரச்சனை....இங்கே இமெயில் அனுப்பினா பிடிப்பினமே!

மொழிபெயர்ப்பாளன் சிரித்துவிட்டு சொன்னான் உம்மட மனிசிக்கு நீர் அனுப்பிறதில பிரச்சனையில்லை ஆனால் நீர் போய் அடுத்தவன்ர மனிசிக்கெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

இப்பத்தான் விளங்கியது நம்மாளுக்கு தான் பிழையான முகவரிக்கு இமெயில் அனுப்பினது.


மொழிபெயர்ப்பாளன் தொடர்ந்தான் அனுப்பினது தான் அனுப்பினீர் , புருசன் நேற்றுத்தான் செத்து கவலையில இருக்கிற ஆளாப்பார்த்தெல்லோ அனுப்பியிருக்கிறீர்.

உம்மட இமெயிலை பாத்திட்டு அந்த பெண் மயங்கி விழ , அந்த அமெரிக்க பெண்மனியின்ட மகன்காரன் கடுப்பாகி பொலிஸ்க்கு சொல்லிப்போட்டான் இது தான் நடந்தது.

அமெரிக்காவில கொஞ்சம் இந்த விசயங்களில கவனமாய் இருங்கோ என்கின்ற அறிவுரையுடன் மொழிபெயர்ப்பாளன் விடைபெற்றான்.

நம்ம ஆள் முதல் வேலையாய் வந்து தான் அனுப்பிய இமெயிலை திருப்பி வாசித்தார்........

To: My Loving Wife
Subject: I've Reached
Date: 01 June, 2008
I know you're surprised to hear from me. They have computers here, and we are allowed to send e-mails to loved ones. I've just reached and have been checked in. I see that everything has been prepared for your arrival tomorrow.
Looking forward to seeing you TOMORROW!
Your loving Hubby........


ஓ கணவன் செத்துகிடகிற மனைவிக்கு இப்படி கணவனிடம் இருந்து இமெயில் போனால் யார்தான் குழம்ப மாட்டார்கள் என்று நினைத்தவாறு தன் வீரதீரச்செயலை எண்ணி மனதுக்குள் மகிழ்ந்தவாறு மனைவியை அழைக்க விமானநிலையம் வந்தார்.....

மனைவி தூரத்தில் தெரிந்தாள்....

மனதுக்குள் பழைய உற்சாகம்......

ஓடிப்போனார் நம்ம ஆள்..... சினிமா படங்களில் வருவது போல் கட்டி அணைத்து மனைவிக்கு முத்தமிட....

இவர் கிட்ட வந்த பின்னர் தான் மனைவி பத்திரகாளி கோலத்தில் தெரிந்தாள்.....

"ஒரு பொம்பிளையை தனியா விட்டு விட்டு ,என்ன மனிச ஜென்மமோ தெரியேல்ல , இமெயில் அனுப்பிறன் என்டு சொல்லிப்போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு என்ன செய்தியள்?"

"ஒருக்கா போன் பண்ணி பாத்திருக்கலாம் தனே?"

"அமெரிக்கா வந்து முதல் நாளே இப்படி என்றால் ? என்ட வாழ்க்கை என்ன ஆகப்போகுதோ?"


நம ஆள் செய்வதறியாது திகைத்து நின்றார். முதலுக்கே நஸ்டம் வந்தது போல் இருந்தது , இனி தேன் நிலவு விளங்கியமாதிரித்தான்....

(சிலர் சிரிப்பார் , சிலர் அழுவார், நான் சிரித்துகொண்டே அழுகின்றேன்........)

பச்சை வயலே..


பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!

மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!)


ஈழ நிலத்தினில் எத்தனை நாள் இன்னும் சாவு வரவிடுமோ?
உயிர் இங்கு மலிவென எத்தனை நாள் இன்னும் கூவித்திரிந்திடுமோ?

வாழும் வயதினில் வாச மலரிங்கு தீயில் எரிந்திடுமோ?
எங்கள் வாசல் முழுவதும் சோகம் எரித்திடும் பாயில் சரிந்திடுமோ?

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே!
எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே!
வன்னி அழகே! மன்னாரின் நிலமே!
தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


அன்னை நிலத்தினுக்காக கரும்புலி ஆகி நடந்திடுவோம்.
நாம் அங்கு எரிந்திடும் போதில் பகை மடி மீது சிரித்திடுவோம்.

அண்ணன் நினைவினில் எம்மை மறந்துமே விண்னில் பறந்திடுவோம்.
எம் ஆசை எல்லாம் தமிழ் ஈழம் அதற்கென அங்கு வெடித்திடுவோம்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)


தேசபுயல் இங்கு வீசும் பொழுதினில் சோகம் வருவதில்லை.
தமிழ் வாசம் சுமந்திடும் பூக்கள் இனி பகை தீயில் எரிவதில்லை.

நாளை எமக்கொரு வாழ்வு மலர்ந்திடும் நம்பியிருந்திடுங்கள்.
எம் தேகம் வெடித்திடும் போதில் விடுதலை கீதம் படித்திடுங்கள்.

(பச்சை வயலே! பனங்கடல் வெளியே! எங்கள் மட்டு நகர் வாவியிலே பாடும் மகளே! வன்னி அழகே! மன்னாரின் நிலமே! தமிழ் ஈழக்கொடி ஏறப்போகும் கோணமலையே!
மேகத்திரளே! அலை மோதும் கடலே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
நாங்கள் போக விடை தாரும் தமிழ் ஈழ நிலமே!
)