Thursday, December 13, 2007

தமிழரின் இறைமையை ஆயுதத்தால் பறித்தெடுத்து சிங்களத்தோடு இணைத்த பிரித்தானியர் இப்போது "அகிம்சை" பேசுவது எப்படி நியாயம்?: "உதயன்" நாளேடு சாடல்

தமிழரின் இறைமையை ஆயுதத்தால் பறித்தெடுத்து சிங்களத்தோடு இணைத்த பிரித்தானியர் இப்போது "அகிம்சை" பேசுவது எப்படி நியாயம்? என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேடு சாடியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேட்டில் (13.12.07) வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்:

கொழும்பில் தனது பணியை முடித்து, அமெரிக்காவின் வாஷிங்ரனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பிரதித் தூதுவர் மட்டப் பதவியை ஜனவரியில் ஏற்றுக்கொள்வதற்காக அங்கு புறப்பட முன்னர், கடந்த திங்களன்று சர்வதேச மனித உரிமைகள் நாளில் இங்கு தலைநகரில் நடைபெற்ற முக்கிய ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறார் கொழும்புக்கான பிரிட்டிஷ் தூதுவர் டொமினிக் சில்க்கொட்.

அவரது உரையில் முக்கிய கருத்து ஒன்றே பலராலும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

"ஈழம் என்ற தனிநாட்டுக்கான அரசியல் அபிலாசை சட்டமுறையற்றது என நான் கூறவில்லை. ஆனால் அதற்காகப் பயன்படுத்தப்படும் முறைதான் முக்கியமானது. புலிகள் அதற்காக மேற்கொள்ளும் முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல." என்று தத்துவம் போதித்திருக்கின்றார் விடைபெற்றுச் செல்லும் பிரிட்டிஷ் தூதுவர்.

இந்த உபதேசத்தை வேறு யாராவது இராஜதந்திரி கூறியிருந்தால் அது வேறு விடயம். இதை பிரிட்டிஷ் தூதுவரே இங்கு வந்து பெரும் அளப்பாக எடுத்துரைப்பதைத்தான் பொறுக்க முடியவில்லை, சகிக்க இயலவில்லை.

தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை சட்டமுறையற்றது என நாம் கூறவில்லை என்ற அளவுக்கு பிரிட்டன் தன்னைத் திருத்திக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் அந்த இலக்கை எட்டுவதற்குத் தமிழர் தரப்பு நடத்தும் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, விமர்சிக்கும் தகுதியும், அருகதையும் பிரிட்டனுக்கோ, அதன் இராஜதந்திரிகளுக்கோ அடிப்படையில் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

இலங்கைத் தீவில், தமிழர் தேசத்துக்கான இந்த விடுதலைப் போராட்டத்தினால் இவ்வளவு இரத்த ஆறு ஓடி, இவ்வாறு பெருமளவில் உயிர், உடைமைகள் அழிந்து, முழுத் தீவுமே கொடூர யுத்தத்தில் சிக்கி அல்லலுறுகின்றது என்றால் அந்த முரண்பாட்டுக்கு வித்திட்டு வழி சமைத்ததே பிரிட்டிஷ் காலனித்துவம்தான் என்பதை மறந்து மறைத்து பேசுகின்றாரோ பிரிட்டிஷ் தூதுவர்?

தேசங்களின் மீதும் தேசியங்களின் மீதும் ஆக்கிரமிப்பு மூலமான தனது சுரண்டல் புத்தியை சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெள்ளைக்காரக் காலனித்துவம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இங்கு காட்டிய சமயம் இலங்கைத் தீவு எப்படி இருந்தது?

வெவ்வேறான மொழி, கலாசாரம், வாழ்வியல் முறை, வரையறை செய்து பிரிக்கப்பட்ட தெளிவான தொடர்ச்சியான தனித்தனியான தாயகப் பிரதேசங்கள் என்ற அடிப்படைகளோடு தமிழர் தேசமும், சிங்களவர் தேசமும் நீண்ட நெடுங்காலமாக இலங்கைத் தீவில் தனித்தனியாகவே அரசோச்சி வந்தன.

இந்தத் தீவை ஆக்கிரமித்த போர்த்துக்கீசரும் சரி, ஒல்லாந்தரும் சரி இந்த இரண்டு தேசங்களினதும் இறைமைகளையும், தனித்துவங்களையும் மதித்து, வேறுபடுத்தி, தனித்தனியாகவே அவற்றை ஆட்சி செய்தனர்.

ஆனால் பின்னர் அவர்களிடமிருந்து இலங்கைத் தீவை ஆயுத பலத்தால் பிடுங்கிக்கொண்ட பிரிட்டன், தன்னுடைய நிர்வாக வசதிக்காக தமிழர் தேசத்தையும், சிங்களவர் தேசத்தையும் 1833 இல் ஒன்றுபடுத்தி ஒன்றுபட்ட ஆளுகைக்குள் அவற்றைக் கொண்டுவந்த போதுதான் தமிழர் தேசத்தின் இறைமை, சிங்கள தேசத்தின் இறைமையுடன் கலந்து அதன் கீழ் மடங்கிப்போகும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது.

அதன்பின்னர் சர்வதேச உலகில் ஏற்பட்ட பல்வேறு அழுத்த நெருக்கடிகளால் தூர தேசங்களில் தனது ஆக்கிரமிப்பையும் சுரண்டலையும் துறக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான பிரிட்டன், அப்போது அதுவரை தான் கைப்பற்றி வைத்திருந்த தமிழர் தேசத்தின் இறைமையை, சிங்கள தேசத்துடன் பிணைத்தபடி, இந்தத் தீவின் பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம் கையளித்து சிறை வைத்து சென்றது.

அதன் விளைவைத்தான் வினையாக இந்தத் தீவு இன்றும் அறுத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்தப் பின்னணியைப் புரியாமல் பேசுகிறார் பிரிட்டிஷ் தூதுவர்.

தமிழர் தேசத்தின் இறைமையை மூன்று நூற்றாண்டு களுக்கு முன்னர் வல்வந்தமாக பிரிட்டன் பிடுங்கியபோது ஆக்கிரமிப்பு செய்தபோது அதை பேச்சு மூலமா அல்லது மென்போக்கிலா பிரிட்டிஷ் முன்னெடுத்தது? பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தனது படை வலிமைச் செருக்கைப் பல்லாயிரம் கடல் மைல்கள் கடந்து இந்தத் தீவின் மீதும் ஏவி விட்டே பிரயோகித்தே ஆயுத முனையில்தான் அதைக் கைப்பற்றியது.

தமிழர் தேசத்தின் இறைமையைக் கைப்பற்றித் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த காலத்திலும் சரி, பின்னர் அதை சிங்கள தேசத்திடம் சிறை வைத்தமை முதல் இன்று வரை, ஆட்சி அதிகாரத்தின் ஆயுத வலிமைக்குள்தானே தமிழரின் இறைமை சிக்கிக் கிடக்கின்றது......?

அதனை மீட்பதற்கு, தனக்கு நியாயம் பெறுவதற்கு, இன்று பிரிட்டிஷ் தூதுவர் போற்றுகின்ற வன்முறையற்ற அஹிம்சை வழியிலான போராட்டப் பாதையில் தமிழர் தேசம் சுமார் மூன்றரை தசாப்தங்கள் போராடியபோது, அது சிங்கள தேசத்தினால் ஆயுத வலிமை மூலம் படைப் பலாத்காரம் மூலம் முறியடிக்கப்பட்ட போது, சிங்கள தேசத்திடம் தமிழர் தேசத்தின் இறைமையைச் சிறைப் பறவையாக ஒப்படைத்துச் சென்ற வெள்ளைக்கார தேசம் என்ன செய்தது? குறைந்த பட்சம் தமிழர்களுக்காக அவர்கள் பக்கத்தில் இருக்கும் நியாயத்துக்காக குரல் கொடுக்க வேனும் முன்வந்ததா?

தான் தமிழர் தேசத்திடமிருந்து ஆயுத முனையில் வல் வந்தமாக பிடுங்கிக் கொண்ட இறைமையை, இப்போது மீட்பதற்காகத் தமிழர் தேசம் வேறு வழியின்றி கடைசி மார்க்கமாக அதே பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரிட்டன் கூறுவது எங்ஙனம் நியாயம்?

"மயிலே, மயிலே இறகுபோடு!" என்று கேட்டு, இறைஞ்சிப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழர் தேசத்துக்கு சிபார்சு செய்வது அங்கு வாழ்பவர்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடனா? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. "Chinkala theevinit kOr paalam amaipOm" enru paadiya Paarathiyaar, Kerala penkalin azhahaiyum paadiyulaar.
    Irandaavathu chari enpathaal, naam muthalaavathaiyum chariyene edukkalaam, thayankaamal.
    Charithirathai alasi pinOkkaathu, thatpOthaiya nilamaiyai kanithu munOkinaal 'uthayan' pattaan!

    ReplyDelete
  2. Where ... Bamini is not working here ... why?

    A thorough disappointment.

    ReplyDelete