Monday, February 18, 2008

ஐரோப்பாவில் புதிய தேசம்: கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம்

கொசோவோ நாடாளுமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கூட்டப்பட்டு கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. ஐரோப்பிய நேரம் மாலை 5:00 மணிக்கு கொசோவோ நாடாளுமன்றத்தில் தலைமை அமைச்சர் ஹசிம் தாச்சி தனிநாட்டுப் பிரகடனத்தை மொழிந்தார்.
சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று கொசோவோ தனிநாட்டினைப் பிரகடனப்படுத்தியதன் மூலம் ஐரோப்பாவில் புதிய தேசம் ஒன்று பிறந்துள்ளது.

கொசோவோவின் தனிநாட்டுப் பிரகடனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த கொசோவோவின் அல்பேனிய மக்கள் தனிநாட்டுப் பிரகடனத்தினை உணர்வெழுச்சியுடன் வரவேற்று கொண்டாடுகின்றனர்.

"சுதந்திர கொசோவோ" அமைதிக்காகவும் பிரதேசத்தின் உறுதித்தன்மைக்காகவும் உழைக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






சுதந்திர கொசோவோ ஒரு ஜனநாயக, பல்லினக் கலாச்சார சமூகமாக விளங்கும் என்பதோடு கலாச்சார மற்றும் மத உரிமைகளுக்கு உத்தரவாதமும் அளிக்கும் என பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பின்லாந்தின் முன்நாள் அரச தலைவர் மாத்தி ஆத்திசாரி தலைமையில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைபின் அடிப்படையில், கொசோவோ தேசம் கட்டியெழுப்பப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் கொசோவோவிற்குரிய தனியான காவல்துறை மற்றும் படைக் கட்டுமானங்கள் நிறுவப்படும் எனவும் பிரகடனத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிக்கவுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள, அதன் வெளியுறவு அமைச்சர்களின் உயர்மட்டச் சந்திப்பினைத் தொடர்ந்து கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை அங்கீகரிப்பது தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது அறிக்கை வெளியிடப்படவுள்ளது.





அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினைத் தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளும் கொசோவோவை அங்கிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 100 வரையான உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பதாக கொசோவோ தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட கொசோவோவில் 92 விழுக்காடு அல்பேனியர்களும் 8 விழுக்காடு சேர்பியர்களும் வசிக்கின்றனர்.

சேர்பியாவிலிருந்து கொசோவோ தனிநாடாகப் பிரிவதனை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த சேர்பியா மற்றும் ரஸ்யா ஆகியன தனிநாட்டுப் பிரகடனத்தினை கண்டித்துள்ளன.

கொசோவோவை ஆக்கிரமித்து கொசோவோ மக்கள் மீது இன அழிப்புப் போரினை கட்டவிழ்த்து விட்ட ஸ்லோவடோன் மிலோசவிச்சின் சேர்பியப் படைகள், 1999 ஆம் ஆண்டு. நேட்டோப் படைகளால் வெளியேற்றப்பட்டன. 1999 ஆம் ஆண்டிலிருந்து ஐ.நாவினால் கொசோவோ நிர்வகிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 16,000 நேட்டோப் படைகள் அங்கு நிலை கொண்டிருந்தன.

கொசோவோ தனிநாட்டுப் பிரகடனம், ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனியரசினை அமைப்பதற்கு உரித்துடையவர்கள் என்ற உலகளாவிய பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தினை வலுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.






தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

விடுதலைப் போராட்டத்தை நடத்தி அதன் பாலான நகர்வுகளின் பின் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

உயிர்களை உவப்பீகை செய்து சுதந்திரம் இறைமை உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி விடுதலையை வென்றெடுத்துள்ள வகையில் தனிநாட்டுப் பிரகடனம் செய்திருக்கும் கொசோவோவுக்கு தமிழ்மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு விடுதலைப் போராட்டத்தை ஏற்று அந்த மக்களுக்கு இறைமை உண்டு, தன்னாட்சி உரிமை உண்டு என்று அதனை அங்கீகரித்து, அதன் தனிநாட்டுப் பிரடனத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒத்துழைத்து செயற்படும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றுக்கும் வாழ்த்துக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

ஒடுக்கப்பட்ட இனம் ஒன்றிற்கான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, இறைமை என்பவற்றை கொசோவோவில் உலகப்பெரும் நாடுகள் அங்கீகரித்து தனிநாட்டுப் பிரகடனத்துக்கு ஒத்துழைக்கின்றமை தமிழினத்துக்கும் அனைத்துலகத்தின் பால் நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கொசோவோ தனிநாட்டுப் பிரகடனத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன் இது உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

நன்றி :- புதினம்

No comments:

Post a Comment