Sunday, February 24, 2008

கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது

தைமகளே! வந்தெம் தலைவாசல் மீதமர்க.

கையோடு உந்தன் கணவன்
ஓளித்தேவன்
சூரியனைக் கூட்டிவந்தெம் சுற்றத்துக்கறிமுகம் செய்.

ஊரிருந்து வேரை உதறி
வெறும் கூடாய்
மூச்சிழுத்துக் கொண்டு முடங்கியுள்ளோம்
எம் தாயே!
பாய்ச்சு உன்விழிப்பார்வை பாவமெலாம் கரையட்டும்.

தஞ்சமென வந்தெம்மைத் தாங்கு
திசையெங்கும்
அஞ்சற்க என்றோர் அசரீரி கேட்கட்டும்.

எந்தத் தடைவரினும் இருப்போம்.

சூழ்ந்திருக்கும்
கங்குல் விடியுமட்டும் களத்தினிலே போரிடுவோம்.

போரில் குதித்த இனம் போர்வையுள்ளே கிடவாது
வேரில் உரம் பாய்ந்த வீரமரம் சாயாது.

சுற்றிவர மூண்டு சுடர்கிறது விடுதலைத் தீ
வேற்றி வருவுக்கு விடிசேவல் கூவுறது.

வந்த பகை சுருண்டு வாலிழக்கும்
‘மகிந்தரது’
கொற்றம் சரிந்து குலையும்
தமிழரது
முற்றம் பூமலர்த்தி முறுவலிக்கும்
புலம் பெயர்ந்து
போன பறவையெல்லாம் புலரியிலே கூடுவரும்.

காண விழிகோடி காணாத பேரழகாய்
மீனகமும்
கோணமலையோடு மன்னாரும்
யாழகமும்
வன்னி நாடதுவும் விலங்கறுக்கும்.

மின்மினியா சூரியனின் முகத்தில் நெருப்பெரிக்கும்?
சின்ன எலிக்குஞ்சா சிறுத்தையினை மண்விழுத்தும்?
வன்னியினை வந்து வளைத்து
அட அந்தப்
'பொன்சேகா' என்ற பொடிப்பயலா வெற்றிகொள்வான்?

வற்றாப்பளையாச்சி வடிவிருக்கும்
அரியாத்தை
முற்றமிது இங்கே முலைசுரத்தல் பாலல்ல
வேழம் படுத்த வீராங்கனை எரிந்து
ஆழம் கிடைக்கின்ற அடங்காமன் பெருவீரம்,
எப்போது வந்து எவன் போருக்கழைத்தாலும்
கற்பூரப் புல்வெளிகள் கலங்கியது கிடையாது.
ஆடிச்சரிந்து எங்கள் ஆலமரம் சரியாது.

கோடி படைவரினும் ‘கோத்தபாய’ கனவொன்றும் வெல்லாது
இங்கே விடுதலைத் தீ அணையாது
உள்ளோடி ஓடி உரம் பெற்ற வேர்களிலே
வெள்ளெலிகள் கடித்து விழுத்திட முடியாது.

நம்பும்
தமிழீழ நடைபயணம் இடையினிலே
தங்கிவிட அல்ல தன்னிடத்தைச் சேர்ந்தவர்க்கே
சூரியன் சூட்டில் சூல்கொண்ட மலையினிலே
காரிருட்டு மேகம் கவியாது
விடுதலையின்
வேரினிலே எந்த வீச எறும்பும் கடியாது.

மீன்பாடும் வாவி மிளிரும்
இரணைமடு வான்பாயும்
கோண வரை மீது முகிலிரங்கும்
பாலாவி நீர்கொண்டு பாடும்
கீரிமலை
ஆளாகி மீண்டும் அழகாய் புதிதுடுக்கும்.புதுவை இரத்தினதுரை

No comments:

Post a Comment